செய்திகள்
அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

திருப்பூர் குமரன் சிலை அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-09 14:41 GMT   |   Update On 2020-08-09 14:41 GMT
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:

மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது, ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு தற்போது உள்ள தொழிலாளர்களுக்கு போதுமான நிதி உதவி வழங்க வேண்டும், ஆதார் கார்டு வைத்துள்ள அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும், 6 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்பதுஉள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் எல்.பி.எப். மாநில துணைச்செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ் தலைமை தாங்கி பேசினார். எல்.பி.எப். சிதம்பரசாமி, ஏ.ஐ.டி. யு.சி.வை சேர்ந்த ரவி, சேகர், குமார், சி.ஐ.டி.யு. அன்பு, குமார், ஐ.என்.டி.யு.சி. சிவசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையட்டி குமரன் சிலை அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் டி.யு.சி.சி, டபிள்யூ.பி.டி.யு.சி, எம்.எல்.எப், எல்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் மாவட்டம் முழுவதும் அவினாசி, பல்லடம் உள்பட 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News