செய்திகள்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வினியோகம்

Published On 2020-08-04 09:13 GMT   |   Update On 2020-08-04 09:13 GMT
அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகம் நேற்று வழங்கப்பட்டது. அதை அவர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
கோவை:

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அரசு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பொருட்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முதல் பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வினியோகம் நடைபெற்றது. கோவையில் ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராஜவீதி துணி வணிகர் சங்க மேல்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாங்குவதற்காக ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் அவர்களின் பெற்றோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் மாணவர்கள் அனைவரும் கூடுவதை தடுக்க உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மட்டும் நேற்று பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.

7-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. அதேசமயம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேற்று பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 40 சதவீத மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News