செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு செயல்பட தொடங்கியது- டீன் காளிதாஸ் தகவல்

Published On 2020-08-03 15:11 GMT   |   Update On 2020-08-03 15:11 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டு செயல்பட தொடங்கி உள்ளது என்று டீன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்ப காலத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா நோயாளிகளால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் பிற நோயாளிகளுக்கும் தொற்று ஏற்பட்டது. இதனால், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாலும், அதில் பலருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு இருப்பதாலும் ஆக்சிஜன் தேவை அதிக அளவு உள்ளது. இதனால் இது போன்ற நோயாளிகளை கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டு செயல்பட தொடங்கி உள்ளது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் காளிதாஸ் கூறும்போது, கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகளுடன் உள்ள சிறப்பு வார்டில் தற்போது 68 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிப்பதற்காக சுழற்சி முறையில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நோயாளிகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது, என்றார்.

Tags:    

Similar News