செய்திகள்
வலங்கைமானை அடுத்த சந்திரசேகரபுரம் அருகே குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை உடைந்துள்ளதை படத்தில் காணலாம்.

வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை உடைந்தது - சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2020-07-31 12:53 GMT   |   Update On 2020-07-31 12:53 GMT
வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை உடைந்தது. இதை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் குடமுருட்டி ஆறு பிரதான பாசன ஆறாக உள்ளது. இந்த ஆற்றில் இருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும் நிலையில் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் பகுதியில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த அணை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அணை சேதமடைந்து காணப்பட்டது.இந்த நிலையில் வலங்கைமான் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நேற்று முன்தினம் தடுப்பணையின் ஒரு பகுதி உடைந்தது. சந்தன வாய்க்கால் உள்பட 20-க்கும் மேற்பட்ட வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு உள்ளது.

இந்த வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாததால் சந்திரசேகரபுரம், தில்லையம்பூர், பூண்டி, ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம், வலங்கைமான், வளையமாபுரம், கீழே நல்லம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேதமடைந்த தடுப்பணையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News