செய்திகள்
ஆன்லைன் வகுப்பு

ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அவகாசம்- தமிழக அரசு கோரிக்கையை ஐகோர்ட் ஏற்றது

Published On 2020-07-28 01:55 GMT   |   Update On 2020-07-28 01:55 GMT
‘ஆன்லைன்’ வகுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அவகாசம் அளித்தது.
சென்னை:

‘ஆன்லைன்’ வகுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு, மத்திய அரசு அளித்த பதில் மனுவில் ‘ ஆன்லைன்’ மூலம் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை தலா 45 நிமிடம் வீதம் 4 வகுப்புகளும் நடத்தலாம்” என்று கூறப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதால், தமிழக அரசின் நிலை என்ன? என்று ஐகோர்ட்டு ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெ.ரவீந்திரன், ‘இந்த வழக்கு தொடரப்பட்டு 3 மாதங்களாகியும், இதுவரை தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எந்த பதிலும் அளிக்காமல் உள்ளது. எனவே, ‘ஆன்லைன்’ வகுப்புகள் குறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கால அவகாசம் வேண்டும்” என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற ஆகஸ்டு 3-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News