செய்திகள்
கோப்புபடம்

ஓமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

Published On 2020-07-19 10:18 GMT   |   Update On 2020-07-19 10:18 GMT
கரூர் அருகே ஓமியோபதி படித்து விட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நொய்யல்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பொன்னிஈஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகண்ணன் (வயது 51). இவர் கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் கடைவீதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, அதில் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் தினமும் காலையில் தளவாப்பாளையத்திற்கு வந்து, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து விட்டு, இரவு வீட்டிற்கு சென்று விடுவாராம்.

இந்தநிலையில் கோபாலகண்ணன் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், கரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தாதேவியிடம், கோபாலகண்ணனின் மருத்துவ முறை குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில், அவர் சம்பந்தப்பட்ட கிளினிக்குக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது கோபாலகண்ணன் ஓமியோபதி மட்டும் படித்து விட்டு, அப்பகுதி பொதுமக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தாதேவி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீசார் தளவாப்பாளையத்திற்கு வந்து, போலி டாக்டர் கோபாலகண்ணனை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கோபாலகண்ணன், பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனால் கோபாலகண்ணனிடம் மருத்துவம் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags:    

Similar News