செய்திகள்
அழிக்காலில் உள்ள ஒரு வீட்டுக்குள் கடல்நீர் செல்வதை படத்தில் காணலாம்.

அழிக்காலில் கடல் சீற்றம்- ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு

Published On 2020-07-12 14:48 GMT   |   Update On 2020-07-12 14:48 GMT
அழிக்காலில் கடல் சீற்றம் ஏற்பட்டு ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. திடீர் சீற்றத்தால் மீனவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே உள்ளது அழிக்கால் மீனவர் கிராமம். இங்கு 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடல் சீற்றம் அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே கடல் சீற்றமாக இருந்தது. அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஊருக்குள் புகுந்தது. இந்த கடல் நீர் அங்குள்ள சுமார் 50 வீடுகளுக்குள் புகுந்ததில் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் நாசமானது. மேலும், சீறி பாய்ந்த அலை மணலை சுருட்டிக் கொண்டு சென்று வீடுகளுக்குள் குவித்தது.

இந்த திடீர் சீற்றத்தால் மீனவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் வீடுகளுக்குள் கடல் நீர் புகாமலிருக்க வாசல் முன்பு மணல் மூட்டைகளை மீனவர்கள் அடுக்கி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News