செய்திகள்
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு- கலெக்டர் தகவல்

Published On 2020-07-10 14:17 GMT   |   Update On 2020-07-10 14:17 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அமெரிக்கன் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு அமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகளையும், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாகவும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட நந்தகோபாலபுரம் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வரும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், நகர் நல அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர் அரிகணேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 923 நபர்கள் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். தற்போது 627 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள 2 அல்லது 3 நபர்கள் ஒரே பகுதியில் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ குழுவினர் அந்த பகுதிக்கு சென்று சுழற்சி முறையில் பல்வேறு நபர்களின் மாதிரிகளை சேகரிக்கின்றனர். கடந்த 3 நாட்களாக திரேஸ்புரம் பகுதியில் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி மற்றும் மருத்துவ பரிசோதனை பணிகள் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் பகுதியில் கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் அந்த பகுதியில் மார்க்கெட்டில் பணிபுரியும் 137 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களும் கண்டறியப்பட்டு மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிய நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்காக 600 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. லேசான அறிகுறி உள்ள நபர்களை தாலுகா ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் தற்போது 600 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை 1000 படுக்கைகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News