செய்திகள்
கலெக்டர் பல்லவி பல்தேவ்

கம்பம் நகரில் பரவும் மர்ம காய்ச்சலை கண்டறிய சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

Published On 2020-07-09 14:56 GMT   |   Update On 2020-07-09 14:56 GMT
கம்பம் நகரில் பரவும் மர்ம காய்ச்சலை கண்டறிய சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
தேனி:

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அப்படி ஒரு நடவடிக்கை இல்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதிகளுக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 6 கொரோனா நல மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் மாவட்டத்தில் 23 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு வழிகாட்டுதல்களின் பேரில் அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டவர்கள் மட்டும் அவர்களின் விருப்பத்தின் பேரில் வீட்டுத்தனிமையில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வீடு தேடி வழங்கப்பட்டுள்ளது. தினமும் மருத்துவர்கள் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அவர்களின் உடல் நிலை குறித்து அறிந்து வருகின்றனர். மேலும், 26 மையங்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான மருத்துவ குழு நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் தட்டுப்பாடு இன்றி போதிய அளவில் உள்ளது.

கம்பம் நகராட்சி பகுதியில் சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நகராட்சி பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்கு பரவி வரும் காய்ச்சல் குறித்து கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளன. வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News