செய்திகள்
ஆன்லைன் மோசடி

599 ரூபாயை திரும்ப பெற நினைத்து ரூ.60 ஆயிரத்தை இழந்த பெண்

Published On 2020-07-02 15:18 GMT   |   Update On 2020-07-02 15:18 GMT
ஆன்லைனில் நைட்டிக்கான ஆர்டரை கேன்சல் செய்து 599 ரூபாயை திரும்ப பெற நினைத்த பெண்ணிடமிருந்து, நூதன முறையில் ரூ.60 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது.
சென்னை:

சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராணி (32). இவர் சில தினங்களுக்கு முன் ஆன்லைன் செயலி மூலம் 599 ரூபாய் மதிப்புள்ள நைட்டி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தை தன்னுடைய கணவரின் ஏடிஎம் மூலம் ஆன்லைனிலேயே செலுத்தி உள்ளார்.

சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததால் செல்வராணிக்கு நைட்டி டெலிவரியாவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே அவர், நைட்டிக்கான ஆர்டரை கேன்சல் செய்தார். அப்போது உங்கள் பணம் திரும்ப செலுத்தப்படும் என எந்தவித மெசேஜும் செல்வராணிக்கு வரவில்லை.

இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட ஆன்லைன் செயலியின் கஸ்டமர்கேர் நம்பரை இணையதளத்தில் தேடி எடுத்து அந்த நம்பருக்கு போனில் பேசி விவரத்தைக் கூறினார். எதிர்முனையில் பேசியவர், உங்களின் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என்றால் வங்கி விவரம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். உடனே செல்வராணியும் வங்கியின் விவரங்களைக் கூறி உள்ளார்.

அதே நேரம் வங்கியிலிருந்து செல்வராணியின் கணவரின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது. அதில் 60,000 ரூபாய் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து செல்வராணியும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மீண்டும் செல்வராணி கஸ்டமர்கேர் நம்பருக்கு போன் செய்து 60,000 ரூபாய் பிடித்தம் செய்த விவரத்தைக் கூறி உள்ளார். அப்போது கஸ்டமர்கேரிலிருந்து பேசிய நபர், மீண்டும் செயலியை டவுன்லோடு செய்யக் கூறி உள்ளார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த செல்வராணி, போனிலேயே வாக்குவாதம் செய்துள்ளார். உடனடியாக கஸ்டமர் கேர் போன் நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு ஏமாந்ததை உணர்ந்த செல்வராணி, இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவுக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News