செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு எதிராக தொடரும் போராட்டம் - ‘சதம்' அடித்தது ஊரடங்கு

Published On 2020-07-02 14:00 GMT   |   Update On 2020-07-02 14:00 GMT
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் நிலையில், 6-ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இன்றுடன் ‘சதம்' அடித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரை முதல் கட்டமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 3-ந்தேதி வரை 19 நாட்களுக்கு 2-ம் கட்ட ஊரடங்கும், மே 4-ந்தேதி முதல் மே 17-ந்தேதி வரை 14 நாட்கள் 3-ம் கட்ட ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.



இதையடுத்து மே 18-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை 14 நாட்கள் 4-ம் கட்ட ஊரடங்கும், ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை 30 நாட்கள் 5-ம் கட்ட ஊரடங்கும் அமலில் இருந்தது. இதையடுத்து ஜூலை 1-ந்தேதி (நேற்று) முதல் 31-ந்தேதி வரை 31 நாட்களுக்கு 6-ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள், திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வருகிற 5-ந்தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்றும், இந்த பகுதிகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த தளர்வுகள் 6-ந்தேதி வரையிலும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையை பொறுத்தமட்டில் நேற்று வழக்கமான நிலையை காணமுடிந்தது. பிரதான சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்ததோடு, வாகன உரிமையாளருக்கு அபராதமும் விதித்தனர். மளிகை கடைகள், காய்கறி கடைகள் பிற்பகல் வரையிலும் இயங்கியது. இவ்வாறு இயங்கிய கடைகளில் கூட்டம் காணப்பட்டது.

இந்த நிலையில், முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னையில் வருகிற 6-ந்தேதி முதல் டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள், அழகு நிலையங்களும் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம். வணிக வளாகங்கள் தவிர இதர வணிக நிறுவனங்கள், ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான சூழலில், வாழ்க்கை போராட்டத்துக்கு மத்தியில் கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி வைரசை எதிர்த்த யுத்த களமாடிய ஊரடங்கு இன்று (வியாழக்கிழமை) 100-வது நாள் என்ற இலக்கை எட்டுகிறது. அதாவது ‘சதம்‘ அடித்திருக்கிறது. கொரோனாவை எதிர்கொண்டபோது டாக்டர்கள், நர்சுகள் உள்பட முதல் வரிசை பணியாளர்கள் பலர் தங்களுடைய உயிரை பறிகொடுத்திருக்கிறார்கள்.

சிலரோ வாழ்வாதாரம் இழந்து தங்களுடைய வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள். சிலர் உறவு, சேமிப்பு என அனைத்தையும் இழந்து மீண்டும் முதலில் இருந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கவேண்டிய கட்டாயத்தில் நிற்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டம் தொடரும் என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கிறது.
Tags:    

Similar News