செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

தந்தை மகன் மரண வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முன் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு -நீதிபதிகள்

Published On 2020-06-30 06:27 GMT   |   Update On 2020-06-30 06:27 GMT
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்சின் உடல்களில் மோசமான காயங்கள் இருந்ததால் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை மேற்கொண்டார். 

இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார்.

காவல் அதிகாரிகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

இதனடிப்படையில், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியை அவதூறாக பேசிய காவலர் மகாராஜன் பணி இடை நீக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.

மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது தொடர்பாக காவலர் மகாராஜன், ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி, மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நேரில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின்போது,  நீதிபதிகள் காவல்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். கடும் மன அழுத்தத்தில் இருந்ததால் அப்படி கூறியதாக காவலர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.

மூவருக்கும் தனித்தனி வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த, 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து, ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. 

சிபிஐ விசாரணையை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சிபிஐ வசம் ஒப்படைக்கபப்டும் வரை, நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று மதியம் தெரிவிக்க வேண்டும்.

முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.  அதனடிப்படையில் அதிக காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் வழக்கு பதிவு செய்ய போதிய முகாந்திரம் உள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News