செய்திகள்
தற்கொலை

ஸ்ரீவைகுண்டம் அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Published On 2020-06-29 09:20 GMT   |   Update On 2020-06-29 09:20 GMT
ஸ்ரீவைகுண்டம் அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றார். அவர்கள் 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளம் கள்ளாண்டர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உலகுராஜ். விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா தேவி (வயது 30). இவர்களுக்கு நெல்சன் ராபர்ட் (6) என்ற மகனும், அபிஷா (5), ஜெனிஷா (3) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

நிர்மலா தேவிக்கு வயிற்றில் கட்டி இருந்ததால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குணமாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் உலகுராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த நிர்மலாதேவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மேலும் அவர் தனக்கு பின்னர் தன்னுடைய குழந்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கருதி, அவர்களுக்கும் விஷம் கொடுத்து கொல்ல எண்ணினார்.

அதன்படி நிர்மலாதேவி தனது மனதை கல்லாக்கி கொண்டு, தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க கொடுத்தார். பின்னர் அவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

இதனால் 3 குழந்தைகளும் கதறி அழுதனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நிர்மலாதேவி மற்றும் அவருடைய 3 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் 4 பேரும் ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அருகே 3 குழந்தைகளுக்கு தாய் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News