செய்திகள்
கரூர் அரசு பள்ளி முன்பு போலீசாரிடம் முறையிட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

கரூரில் அரசு பள்ளியை தனிமை வார்டாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2020-06-22 09:12 GMT   |   Update On 2020-06-22 09:12 GMT
கரூரில் அரசு பள்ளியை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற ஏற்பாடு நடந்தது. இதற்குபொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்:

வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து கரூர் வருகை தருபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கென தளவாய்பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி, அரசு ஆஸ்பத்தரிகளில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்ற நேற்று ஏற்பாடு நடந்தது. அந்த பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் குழந்தைகள், வயதானவர்கள் அதிகம் உள்ளதாகவும், போக்குவரத்திற்கு பிரதானமாக இந்த சாலை உள்ளதாககூறி தனிமைப்படுத்தப் பட்ட வார்டாக இதனை மாற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பூட்டை எப்படி உடைக்கலாம்? எனக்கூறி நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கரூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அந்த அரசு பள்ளியின் கழிவறை கழிவுநீர் தங்கள் பகுதியில் வழிந்தோடுகிறது. எனவே இதில் யாரையும் தங்க வைத்தால் எங்களுக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்படக்கூடும் என போலீசாரிடம் பொதுமக்கள் வாதிட்டனர். அப்போது உங்கள் கோரிக்கையை மனுவாக அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போலீசார் சமாதானம் செய்தனர். மேலும் நகராட்சி ஊழியர்களிடமும் இது குறித்து விசாரித்தனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News