செய்திகள்
ஆர்ப்பாட்டம்

திருநாவலூரில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-06-20 09:14 GMT   |   Update On 2020-06-20 09:14 GMT
களமருதூர் ஊராட்சி செயலாளரை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை:
 
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள களமருதூர் ஊராட்சியில் பெரியார் நகர் பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.130 மட்டுமே கூலியாக வழங்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசு வழங்க வேண்டிய 256 ரூபாயை வழங்காத களமருதூர் ஊராட்சி செயலாளரை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கொளஞ்சி, பொருளாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் செந்தில், சின்னதுரை, வேலு உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதற்கிடையே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறி 100-க்கும் மேற்பட்டோரை திருநாவலூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் விவசாய தொழிலாளர் சங்க முக்கிய பிரதிநிதிகளுடன் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News