செய்திகள்
உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராமிய கலைஞர்கள்

உதவி கலெக்டர் அலுவலகத்தில் மேள வாத்தியங்களுடன் வந்து கிராமிய கலைஞர்கள் மனு

Published On 2020-06-05 08:47 GMT   |   Update On 2020-06-05 08:47 GMT
தென்காசி மாவட்டத்தில் கிராமிய கலைஞர்கள் மேள வாத்தியங்களுடன் வந்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தென்காசி:

தென்காசி மாவட்ட அனைத்து கிராமிய கலைஞர்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில், சங்க தலைவர் முத்தையா தலைமையில் கிராமிய கலைஞர்கள் நேற்று காலை தென்காசி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மேள வாத்தியங்களுடன் குவிந்தனர். அப்போது அவர்கள் வாத்தியங்களை இசைக்க தயாரானார்கள். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வாத்தியங்களை இசைக்கக்கூடாது என்றும், கோஷங்கள் எழுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து கலைஞர்கள் கோரிக்கை அடங்கிய மனுவை உதவி கலெக்டர் பழனிகுமாரிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘தென்காசி மாவட்டத்தில் நாதஸ்வரம், தவில், பம்பை, வில்லுப்பாட்டு, கணியான் கூத்து உள்ளிட்ட கலைகள் மூலம் சுமார் 2 ஆயிரம் கலைஞர்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, வேலை இன்றி வறுமையில் வாடி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள கொரோனா கால நிவாரண நிதி மற்றும் கடன் உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே கிராமிய கலைஞர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 6 மாத காலத்துக்கு வழங்கவும், கடன் உதவியாக தலா ரூ.3 லட்சம் வரை வங்கிக்கடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News