செய்திகள்
வானிலை நிலவரம்

தென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2020-06-02 08:39 GMT   |   Update On 2020-06-02 08:39 GMT
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறி உள்ளார்.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கரூர் பரமத்தியில் 8 சென்டி மீட்டர், குழித்துறை, துவாக்குடியில் தலா 6 சென்டி மீட்டர், திருக்காட்டுப்பள்ளி, கன்னிமாரில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.



மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவும், அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் வலுவடைந்து நாளை பிற்பகல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மகாராஷ்டிரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு குஜராத் கடற்கரையில் ஹரிஹரேஷ்வர்- டாமன் இடையே அலிபாக் (ராய்ப்பூர்) அருகே கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News