செய்திகள்
அரசு பேருந்து

திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் குறைந்த அளவு பயணிகளுடன் இயங்கிய 399 அரசு பஸ்கள்

Published On 2020-06-01 11:18 GMT   |   Update On 2020-06-01 11:18 GMT
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் டவுன் பஸ் மற்றும் தொலைதூர பஸ்கள் என 399 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டன.
திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசு அலுவலர்கள் சென்று வருவதற்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களில் கட்டணம் இல்லாமல் அரசு ஊழியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பொதுமக்களுக்கு இதில் அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கை தளர்த்தி அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று முதல் அரசு பஸ்கள் 50 சதவீதம் இயங்கத் தொடங்கின.

இதனையடுத்து திண்டுக்கல் கோட்டத்தில் 104 நகர பேருந்துகள், 93 தொலைதூர பேருந்துகள், 20 மலைப்பேருந்துகள் என 215 பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டன. இதே போல் தேனி கோட்டத்தில் 52 நகர பேருந்துகள், 119 தொலைதூர பேருந்துகள் 12 மலைப் பேருந்துகள் என 183 பஸ்கள் இயக்கப்பட்டன.

திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை, ஆடலூர், தாண்டிக்குடி, பாச்சலூர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் கொடைக்கானலுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கோடை காலமாக இருப்பதாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாலும் கொடைக்கானல், ஏற்காடு, ஊட்டி போன்ற சுற்றுலா நகரங்களுக்கு இன்னும் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக டெப்போக்களில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பஸ் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டன. டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு கையுறை, முகக்கவசம், சானிடைசர் ஆகியவை போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பஸ்சில் ஏறும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதுடன் அவர்கள் சமூக இடைவெளியுடன் அமரவும் வலியுறுத்தப்பட்டனர்.

பஸ்சின் பின் வாசல் வழியாக ஏறி முன் வாசல் வழியாக இறங்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். பஸ்களில் அதிகபட்சமாக 60 சதவீதத்துக்கு மேல் பயணிகள் இருக்க கூடாது என்று கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் அரசு பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறதா? என்பதை பொது மேலாளர் கணேசன் ஆய்வு செய்தார். துணை மேலாளர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக பஸ் நிலையம் முழுவதும் மாநகராட்சி மூலம் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தவர்கள் ஆர்வமுடன் சென்றனர். வேறு மண்டலத்துக்கு செல்ல வேண்டி இருந்தவர்கள் இ-பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால் சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News