செய்திகள்
கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட தேஜாஸ் விமானத்தில் ஏறிய விமானப்படை தளபதி பதாரியா பறக்க தயாரான காட்சி.

வானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதியுடன் மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் போர் விமானம்

Published On 2020-05-28 14:06 GMT   |   Update On 2020-05-28 14:06 GMT
வானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தை இந்திய விமானப்படை தலைமை தளபதி அறிமுகம் செய்து வைத்தார்.
கோவை:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம்(எச்-.ஏ.எல்.) தயாரித்த தேஜாஸ் ஐ.ஓ.சி. என்ற வகை போர் விமானம் கடந்த 2018-ம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேஜாஸ் விமானத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு தேஜாஸ் மார்க்-1 எப்.ஓ.சி. என்ற ரக போர் விமானத்தை தயாரித்துள்ளது. இந்த விமானம் வானில் பறக்கும் போதே எரிபொருளை நிரப்பும் வசதி உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த புதிய போர் விமானத்தை கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள 18-வது படை அணியில் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்றுக்காலை நடந்தது. இதற்காக 18-வது படை பிளையிங் புல்லட்ஸ் என்ற புதிய படை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில், இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா கலந்து கொண்டு புதிய போர் விமானத்தை அறிமுகம் செய்து வைத்தார்.



அதைத் தொடர்ந்து புதிய விமானத்திற்கு இந்து, சீக்கிய, கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆகிய சர்வ மதங்களை சேர்ந்த குருமார்கள் பிரார்த்தனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து விமானம் முன்பு தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் போர் விமானத்தை தயாரித்த இந்துஸ்தான் ஏரோநாடிக்கல்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.மாதவன் தேஜாஸ் விமானத்தின் ஆவணங்களை தலைமை தளபதி பதோரியாவிடம் ஒப்படைத்தார். அதன்பின்னர் புதிய விமானத்தின் சாவியை விமானியிடம் தலைமை தளபதி கொடுத்தார்.

அதன்பின்னர் அவர் விமானிகளிடையே பேசியதாவது:-

முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட தேஜாஸ் மார்க்-1 எப்.ஓ.சி. ரக விமானம், மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு விமானம் சூலூருக்கு வந்துள்ளது. தொடர்ந்து 15 போர் விமானங்கள் மற்றும் 4 பயிற்சி விமானங்கள் இங்கு கொண்டு வரப்படும். இந்த போர் விமானம் இந்திய விமானப்படைக்கு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது.

சர்வதேச அளவில் இந்திய விமானப்படை சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த 10, 20 ஆண்டுகளுக்கு எங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் விமானப்படை மேம்பாட்டு முகமை, சிறு, குறுந்தொழில் துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும். விமானப்படைக்கு நிதி ஒதுக்குவதில் சில சிரமங்கள் இருந்தாலும், பலத்தை மேம்படுத்துவதில் அது தடையாக இருக்காது. பெருமளவு தேவைகளை உள்நாட்டு உற்பத்தி மூலமாகவே நாங்கள் பூர்த்தி செய்துகொள்கிறோம். தவிர்க்க முடியாத நேரங்களில்தான் வெளிநாடுகளை நாடுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர். மாதவன், பெங்களூருவில் உள்ள விமானப்படை மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குனர் கிரிஷ் எஸ்.தியோதரே, தென் பிராந்திய விமானப்படை தளபதி அமித் திவாரி, சூலூர் விமானப்படை அதிகாரி எஸ்.ஜே. பென்ட்சே மற்றும் விமானப்படை அதிகாரிகள், விமானிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய போர் விமானத்தை அறிமுகம் செய்து வைக்க வந்த விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதோரியாவை கவுரவிக்கும் வகையில் சாரங் ரக ஹெலிகாப்டர்கள், விமானப்படை விமானங்கள் மற்றும் தேஜாஸ் விமானங்கள் வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டன. புதிய போர் விமானத்தை வரவேற்கும் வகையில் தீயணைப்பு படை வாகனங்கள் போர் விமானங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தன. 
Tags:    

Similar News