செய்திகள்
கோடை வெயில்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2020-05-20 01:14 GMT   |   Update On 2020-05-20 01:37 GMT
அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் 28-ம் தேதி நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம்.

அக்னி நட்சத்திரத்தின் கோரத்தாண்டவமான 24 நாட்களில் முதல் 12 நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாவதும், அடுத்த 12 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவதும் வழக்கம்.

ஆனால் நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், சேலம், தர்மபுரி, திருத்தணி என பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டியது.

இதற்கிடையே, வங்கக்கடலில் நிலவி வந்த அம்பன் புயல் வடக்கு நோக்கி குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்கள் நோக்கி நகர்ந்தது. கூடவே தமிழகத்தில் உள்ள ஈரப்பதத்தையும் அப்படியே அள்ளிக்கொண்டு சென்று விட்டது.

இதனால் வெப்பத்தின் தாக்கம் அடுத்த 2 நாட்களுக்கு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை மாநகர், மதுரை, வேலூர், திருத்தணி, திருச்சி, மன்னார்குடி, சேலம், தர்மபுரி போன்ற நகரங்களில் 100 டிகிரியை தாண்டுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வரும் 23-ம் தேதிக்கு பிறகு சற்று வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நாட்களில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தை தவிர்க்கலாம். பகலில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Tags:    

Similar News