செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பால் விழி பிதுங்கும் விழுப்புரம் மக்கள்

Published On 2020-05-18 12:41 GMT   |   Update On 2020-05-18 12:41 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் நிபந்தனை தளர்த்தப்படவில்லை. இதனால் விழுப்புரம் மாவட்ட மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு 700-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

அவர்களை மாவட்ட எல்லையான ஓங்கூர் சோதனைச் சாவடியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் பரிசோதித்தனர். பின்னர் அவர்கள் திண்டிவனம், மயிலம் ஆகிய பகுதிகளில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் தனிமைபடுத்தப்பட்டனர்.

இவர்களை பரிசோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகாரிக்க தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். கிராமபுற எல்லைகளை சீல் வைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால் விழுப்புரம் மக்கள் கொரோனா பாதிப்பை உணராமல் தெருக்களில் சுற்றி திரிந்தனர்.

இவ்வாறு வரும் இளைஞர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர். ஆனாலும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர். எனவே கொரோனா நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கியது. நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா கட்டுக்குள் வந்த மாவட்டங்களில் நிபந்தனை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் நிபந்தனை தளர்த்தப்படவில்லை. இதனால் விழுப்புரம் மாவட்ட மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், நகர் மற்றும் கிராமபுற மக்கள் கொரோனா பாதிப்பை உணர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெளியே வருபவர்கள் அரசின் உத்தரவை மதித்து முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டுக்குள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் கொரோனா கட்டுக்குள் வரும் என்றார்.

Tags:    

Similar News