செய்திகள்
மழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை- குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

Published On 2020-05-13 08:19 GMT   |   Update On 2020-05-13 08:32 GMT
குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை கொட்டியதால் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்றிரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி:

வெப்ப சலனம் மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக இரு மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழையும் பெய்தபடி இருந்தது. சில இடங்களில் இடியுடன் பலத்த மழையும் பெய்தது. நேற்று மாலையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. இரவிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, அம்பை, நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்தபடியே இருந்தது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை பெய்தது.

குற்றாலம் மலைப் பகுதியில் கனமழை கொட்டியதால் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்றிரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் நிலையிலும் அருவி பகுதிக்கு யாரும் வரவில்லை.

மேற்குதொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் நேற்றிரவு மழை பெய்தது. பாபநாசம், சேர்வலாறு, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், ராமநதி ஆகிய அணைபகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த அணைகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், கொட்டாரம், மயிலாடி, குளச்சல், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

Tags:    

Similar News