செய்திகள்
விபத்து

பழனி அருகே மரத்தில் லாரி மோதி டிரைவர், கிளீனர் பலி

Published On 2020-05-08 08:36 GMT   |   Update On 2020-05-08 08:36 GMT
பழனி அருகே இன்று அதிகாலை புளியமரத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர், கிளீனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி அதிக அளவு காய்கறிகள் கேரளா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக டிரைவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் இருந்தாலும் அந்த டிரைவர் தனிமைப்படுத்தப்பட்டு அவர் லாரி ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இதனால் காய்கறி கொண்டு செல்ல டிரைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று இரவு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி எர்ணாகுளம் செல்வதற்கு தயாராக இருந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் தினேஷ்குமார் (வயது23). டிரைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆவார். லாரி டிரைவர் கிடைக்காததால் இவரை வியாபாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இரவு 1.30 மணிக்கு புறப்படும் இந்த லாரி அதிகாலை 4 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். லாரியில் ராமலிங்கம்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் அங்குச்சாமி (20) கிளீனராக இருந்தார். லாரி சுமார் 2 மணி அளவில் சத்திரப்பட்டி போலீஸ் நிலையம் அருகே சென்றபோது அங்கிருந்த பேரிகார்டு மீது மோதியது. பின்னர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி புளியமரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் லாரிக்குள் இருந்த தினேஷ்குமார், அங்குச்சாமி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சத்திரப்பட்டி இன்ஸ்பெக்டர் வீரகாந்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி டிரைவருக்கு பதிலாக ஆம்புலன்ஸ் டிரைவரை நியமித்ததால் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பலியான 2 வாலிபர்களுக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News