செய்திகள்
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

Published On 2020-05-06 07:21 GMT   |   Update On 2020-05-06 07:21 GMT
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி மருத்துவத் துறைக்கு சவால் விடுத்த சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தனது மருந்தை பரிசோதனை செய்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால் குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு சவால் விடுத்தும் அவர் பேசியிருந்தார். 

இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர் புகார் கொடுத்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று தணிகாசலத்தை கைது செய்தனர். 

திருத்தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என்றும், மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை கூறியது.

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் ‘ரத்னா சித்த மருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார் திருத்தணிக்காசலம்.
Tags:    

Similar News