செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் ஒத்திவைப்பு

Published On 2020-04-27 13:28 GMT   |   Update On 2020-04-27 13:28 GMT
அடுத்த மாதம் 4-ந் தேதி நடைபெற இருந்த திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பதுடன் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும். சிறப்புவாய்ந்த இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்(மே) 4-ந் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது.

இந்த நிலையில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த நிலையில் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மறுநாள் 4-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறுமா? என்பது பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

இதற்கிடையில் மதுரை உள்பட பல்வேறு முக்கிய கோவில் விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா நடைபெறுமா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அதிகமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த மாதம்(மே) 4-ந் தேதி நடைபெற இருந்த திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News