செய்திகள்
பணியில் ஈடுபட்டுள்ள அய்யாதுரை

தாயின் இறுதி சடங்கை முடித்த கையோடு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்

Published On 2020-04-23 08:26 GMT   |   Update On 2020-04-23 08:26 GMT
இறந்த தாயின் உடலை அடக்கம் செய்த கையோடு பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வி.களத்தூரில் சில வாரங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

தற்போது அதே கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் தலைமைக் காவலர் உள்பட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வி.களத்தூர் போலீஸ் நிலையம் மூடப்பட்டு, தற்போது நடமாடும் காவல் நிலையமாக நான்கு சக்கர வாகனத்தில் இயங்கி வருகிறது. வி.களத்தூர் கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் உயர் அடுக்கு பாதுகாப்பில் உள்ளன. கிராமத்துக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வி.களத்தூர் கிராமத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் அய்யாதுரையின் தாயார் அங்கம்மாள் உடல் நலக்குறைவால் இறந்தார். தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த கையோடு, கிராம மக்களின் நலனுக்காக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அய்யாத்துரை மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், அம்மாவுக்கு 80 வயது ஆகிவிட்டது. அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இருந்தன. உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 10 நாட்களாகவே அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் அம்மா இறந்துவிட்டார். கொரோனா பிரச்சனை காரணமாக சொந்தக்காரங்க யாரும் வர முடியாத சூழல். நான் தூய்மைப் பணியாளராக இருப்பதால், எனக்கு ஊரோட நிலவரமும் கொரோனா நோய்த் தொற்று குறித்தும் தெரியும். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்கிறேன்.

எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடி இருப்பதையும், ஊரடங்கு உத்தரவால் மக்கள்படும் கஷ்டங்களையும் தினம்தினம் நேரில் பார்க்கிறேன். அதனால், இறந்த அம்மாவின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க மனமில்லை. சில மணி நேரம் அம்மாவின் உடலை வைத்திருந்தோம். பிறகு 4.30 மணி அளவில் குறைந்த நபர்களோடு அம்மாவை அடக்கம் செய்தோம்.

எனக்கும் நான்கு குழந்தைகள் இருக்காங்க. நம்மைப் போல் பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு ஜனங்க கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம். அம்மாவை நினைத்து வீட்டில் முடங்கிக் கிடக்க மனமில்லாமல் வழக்கம்போல் பணிக்கு திரும்பி விட்டேன் என்றார்.

இறந்த தாயின் உடலை அடக்கம் செய்த கையோடு பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
Tags:    

Similar News