செய்திகள்
தீப்பெட்டி தொழிற்சாலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்த காட்சி.

கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் முழுவதும் செயல்பட தொடங்கியது

Published On 2020-04-22 13:36 GMT   |   Update On 2020-04-22 13:36 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் முழுவதும் செயல்பட தொடங்கியது. குறைவான தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர்.
கோவில்பட்டி:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதனால் அங்கு பணியாற்றிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அவரகள் சுமார் ஒரு மாத காலமாக வேலையில்லாமல் இருந்தனர். 

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவாத இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடித்து வணிக நிறுவனங்கள்  மற்றும் தொழிற்சாலைகளை இயங்குவதற்கு அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுத்து கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது.  அதன்படி கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

தீப்பெட்டி தொழிற் சாலைகளில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுழற்சிமுறையில் பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்படி கோவில்பட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், தீக்குச்சி தொழிற்சாலைகள் மருந்து முக்கிய குச்சிகளை பெட்டிக்குள் அடைக்கும் நிறுவனங்கள் போன்றவை நேற்று செயல்பட தொடங்கியது. 

அங்கு தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வேலை செய்கின்றனரா என்று அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து மற்ற ஆலைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. 

அதன்படி கோவில்பட்டி பகுதியில் உள்ள அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இன்றுமுதல் வழக்கம் போல் செயல்பட தெடங்கின. ஆனால் மிகக்குறைந்த அளவே தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். முதல்கட்டமாக பகலில் மட்டுமே தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை அவர்களது வீடுகளில் இருந்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் அழைத்து வரும், வேலைமுடிந்த பின்னர் அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News