செய்திகள்
குரங்குகளுக்கு உணவாக கொட்டப்படும் வெள்ளரிக்காய்கள்.

மணப்பாறை பகுதியில் குரங்குகளுக்கு உணவாக குவியலாக கொட்டப்படும் வெள்ளரிக்காய்கள்

Published On 2020-04-08 14:46 GMT   |   Update On 2020-04-08 14:46 GMT
மணப்பாறை பகுதியில் ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களுக்கு வெள்ளரிக் காய்களை லாரி டிரைவர்கள் ஏற்றிச்செல்ல முன்வராததால் அதை குரங்குகளுக்கு உணவாக கொட்டி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை மருங்காபுரி பகுதியில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் வெள்ளரிக்காய் தமிழகம் மட்டுமன்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதிகளில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டது. அவை வளர்ந்த நிலையில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட இருந்தது. இந்த நிலையில் வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலங்களுக்கு வெள்ளரிக் காய்களை லாரி டிரைவர்கள் ஏற்றிச்செல்ல முன்வராததால் அவை அனைத்தும் குவியல் குவியலாக தேங்கிக் கிடக்கிறது.

தமிழகத்தில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவை அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  விவசாயிகள் பொன்னணியாறு அணை பகுதியில் உள்ள சாலையில்  சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவாக வெள்ளரிக்காய்களை குவியல் குவியலாக கொட்டி வருகின்றனர். அதனை குரங்குகள் உணவாக  உட்கொள்கின்றன. இப்படி  வெள்ளரிக்காய் வீணாக கொட்டப்படுவது விவசாயிகளிடையே  கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் அறுவடை செய்யப்படும் வெள்ளரிக்காய்களை கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைப்போம்.

தமிழகத்திலும் வியாபாரிகள் பலர் வாங்கி செல்வார்கள். பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள் விற்பனை செய்வது உண்டு. தள்ளு வண்டிகளில் சென்றும் விற்பனை செய்வார்கள் . ஆனால் இப்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் அறுவடை செய்யப்பட்ட வெள்ளரிக்காய் அனைத்தும் தேங்கி கிடக்கிறது. இதனால் அவற்றை குரங்குகளுக்கு உணவாக அளிக்கிறோம். இதன் மூலம் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News