செய்திகள்
நாமக்கல் முட்டை

உற்பத்தி குறைவால் முட்டை விலை கிடு கிடு உயர்வு

Published On 2020-04-08 11:17 GMT   |   Update On 2020-04-08 11:17 GMT
ஊரடங்கு உத்தரவையொட்டி நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி குறைவால் முட்டை விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகள் மூலம் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகி வந்தன. முட்டை மற்றும் கோழிகளால் கொரோனா வைரஸ் பரவுவதாக எழுந்த வதந்திகளால், முட்டை விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால், மொத்த உற்பத்தியில் 2 கோடி முட்டைகள் பண்ணைகளிலும், குளிர்பதனக் கிடங்குகளிலும் தேக்கமடைந்தன.

மேலும், பண்ணைகளில் உற்பத்தியைக் குறைக்க, கோழிகளுக்கான தீவனமிடுதல், குஞ்சுகள் விடுதல் உள்ளிட்டவை குறைக்கப்பட்டன. இதனால், ஜனவரி மாதம் ரூ.4.10க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை, மார்ச் தொடக்கத்தில், ரூ.1.95ஆகக் குறைந்தது.

இது தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை அறிவிப்பாக இருந்தாலும், பண்ணைகளில் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் 70 காசுகள் வீதம் குறைத்தே வாங்கிச் சென்றனர். முட்டை, கோழி இறைச்சியால் கொரோனா பரவாது என்ற தகவல் மக்களிடையே பரவியதால், அவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

தற்போது 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது வீடுகளில் தனித்திருப்போர் புரதச் சத்து கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தியானது சுமார் 2.50 கோடி அளவிலேயே உள்ளது . தேவை அதிகமுள்ள நிலையில், முட்டை விலையை உயர்த்த வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவிடம் பண்ணையாளர்கள் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 10 நாள்களில் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. கடந்த 3 நாள்களில் மட்டும் 30 காசுகள் வரை உயர்ந்தது. நாமக்கல் மண்டலம் மட்டுமின்றி, பிற மண்டலங்களிலும் முட்டை விலை, விற்பனை ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், மக்களிடையே முட்டை நுகர்வு அதிகரித்து வருவதால், விலையை மேலும் உயர்த்த வேண்டும் என பண்ணையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.4ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும், கூட்டத்தில் பண்ணையாளர்கள் மைனஸ் விலைக்கு கொடுக்காமல், ரூ.4க்கு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (காசுகளில்): வருமாறு:-

ஹைதராபாத் 355, விஜயவாடா345, பர்வாலா275, ஹோஸ்பெட்335, மைசூரு380, சென்னை410, மும்பை405, பெங்களுரு370, கொல்கத்தா400, டெல்லி 300.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.87ஆகவும், முட்டைக் கோழி ரூ.62ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News