செய்திகள்
கைது

மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது

Published On 2020-04-07 14:48 GMT   |   Update On 2020-04-07 14:48 GMT
மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் திருட்டு சம்பவம் நடந்து வருவதால் கரூரில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபாட்டில்களை சணப்பிரட்டியில் உள்ள குடோனுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் அருகே உள்ள ஆத்தூர் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மதுபாட்டில்களை போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றி குடோனுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு நடந்தது.

அப்போது அந்த டாஸ்மாக் கடையின் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர். அதனை அந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் புலியூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் (வயது 49), விற்பனையாளரான அரவக்குறிச்சி நாகம்பள்ளியை சேர்ந்த கணேசன் (48) ஆகியோர் ஊரடங்கிற்கு முன்பாகவே கடையின் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது.

மேலும் கடை பூட்டிய பிறகு மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. இது குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கம், கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News