செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை - கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2020-04-04 11:09 GMT   |   Update On 2020-04-04 11:09 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக சங்கு அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று சிலருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்பில் உள்ள பல்வேறு நபர்களுக்கு ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அலுவலர்கள், நோய் தொற்றுக்கு ஆளான நபரின் பயண விவரங்களை முழுமையாக, அவர்கள் வரும் வழியில் வெளிமாநில அல்லது வெளி மாவட்டத்தில் யார், யாரை சந்தித்து இருந்தாலும், வெளிமாநில அல்லது வெளி மாவட்டத்தில் ஓட்டல்களில் உணவு சாப்பிட்டு இருந்தாலும், வாடகை வாகனங்களை பயன்படுத்தி இருந்தாலும், அதுதொடர்பான விவரங்களை சேகரிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர் சந்திக்க, சென்று வந்த பலசரக்கு கடை, பால் கடை உள்ளிட்ட அனைத்து பகுதிகளின் விவரங்கள் அறிந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் அந்த பகுதிகளில் உள்ள அனைவருக்கும் தினசரி காய்ச்சல் உள்ளதா என்பதை பணியாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். இந்த விவரங்களை அனைத்தும் கவனமாக தயாரித்து இதுதொடர்பாக மற்ற மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டு உள்ள நபர்களின் இருப்பிட பகுதியில் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். இந்த பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கிருஷ்ணலீலா(தூத்துக்குடி), அனிதா(கோவில்பட்டி), உதவி இயக்குனர்(பஞ்சாயத்துகள்) உமாசங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News