செய்திகள்
ரேசன் கடை (கோப்பு படம்)

மதுரை: 21 ரேசன் கடைகளில் 1000 ரூபாய்-நிவாரணப் பொருட்கள் வழங்குவது நிறுத்திவைப்பு

Published On 2020-04-02 04:56 GMT   |   Update On 2020-04-02 04:56 GMT
மதுரை மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் உள்ள ரேசன் கடைகளில் 1000 ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த நிவாரணம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. நிவாரணப் பொருட்களை வாங்குவதற்கு, ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் தெரு வாரியாக பிரிக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

கொரோனா நோய் பரவும் அச்சம் இருப்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், தினமும் 70 முதல் 100 ரேஷன் அட்டைகளுக்கே ரூ.1,000 மற்றும் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரை மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் உள்ள 21 ரேசன் கடைகளிலும் 1000 ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு ஏப்ரல் 8-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலூரில் 14 கடைகளிலும், கொட்டாம்பட்டியில் 7 கடைகளிலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்கள் வழங்க தற்காலிக தடை விதித்து வட்டாட்சியர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News