செய்திகள்
அம்மா உணவகம்

அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு வழங்க ஏற்பாடு- மதுரை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

Published On 2020-03-24 12:53 GMT   |   Update On 2020-03-24 12:53 GMT
மதுரை மாநகராட்சி அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு வழங்குவது குறித்து ஆணையாளர் விசாகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலினை முற்றிலுமாக தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் கொரோனோ வைரஸ் காய்ச்சல் பரவுவதனை தடுக்க முடியும் என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இன்று (24-ந் தேதி) மாலை 6 மணி முதல் 31-ந் தேதி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144-ன் கீழ் உரிய நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களில் காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆணையாளர் திடீர் நகர், புதூர், காந்திபுரம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து கூடுதல் பணியாளர்களை நியமிக்குமாறும், உணவுக்கு வேண்டிய பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு தேவைப்படும் மருந்துகளை இருப்பில் வைத்துக் கொள்ளுமாறும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கவனமாக பரிசோதனை செய்யுமாறும் கூறினார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் பிரேம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ராமசுப்பிரமணியன், மனோகரன், கவிதா உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News