செய்திகள்
திண்டுக்கல் சீனிவாசன்

தமிழக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு- திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

Published On 2020-03-12 03:05 GMT   |   Update On 2020-03-12 03:05 GMT
தீவிர பாதுகாப்பு நடவடிக்கையினால் தமிழகத்தின் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் வனத்துறை மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துப் பேசியதாவது:-

தீவிர காடு வளர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக வனப்பரப்பு 2017-ம் ஆண்டில் 26 ஆயிரத்து 281 ச.கி.மீட்டரில் இருந்து 2019-ம் ஆண்டில் 26 ஆயிரத்து 364 ச.கி.மீ ஆக அதிகரித்துள்ளது. மரங்கள் பரப்பளவு 2017-ம் ஆண்டில் 4,671 ச.கி.மீட்டரில் இருந்து 2019-ம் ஆண்டில் 4,830 ச.கி.மீ ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு வனத்துறை வனத்தின் பரப்பை விரிவாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டதன் பயனாக 20.27 சதவீத அளவிற்கு வனப்பரப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது இது 2017-ம் ஆண்டின் இந்திய வன நிலை அறிக்கையுடன் ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டில் 83.02 ச.கி.மீ. வனப்பரப்பு அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் பல்லுயிர் மற்றும் உயிர்ப் பன்மையை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடப்பு 2020-21-ம் ஆண்டில் ரூ.920.56 கோடி நிதியில் தொடங்கப்பட உள்ளது.

மேற்கு மற்றும் கிழக்கு மலைத்தொடர்ச்சி மலைகள் உள்பட வனங்களை காத்திட அரசு ஏராளமான நடவடிக்கைகளையும் காவல் மற்றும் தடுப்பு முயற்சிகளையும் கையாண்டு வருகிறது. அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் பயனாக, “காடுகளின் வளம் காட்டி” என அழைக்கப்படும் புலிகளின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 229-ல் இருந்து 2018-ம் ஆண்டில் 264-ஆக அதிகரித்துள்ளது.

வனத்துறையின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே, யாருடைய தலையீடும் இல்லாமல் இணையவழி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News