செய்திகள்
கொள்ளை

என்.ஜி.ஓ.காலணியில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை

Published On 2020-02-28 14:36 GMT   |   Update On 2020-02-28 14:36 GMT
என்.ஜி.ஓ.காலணியில் டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
என்.ஜி.ஓ.காலணி:

நாகர்கோவிலில் இருந்து சங்குதுறை பீச் செல்லும் சாலையில் என்.ஜி.ஓ. காலணியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக ராஜகோபாலும், விற்பனையாளராக ராஜனும் உள்ளனர். இவர்கள் நேற்றிரவு விற்பனை முடிந்து  ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 100 பணத்தை எடுத்து கொண்டு வீடு திரும்பினர்.

இன்று அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் கதவு  திறந்து கிடப்பதை கண்டனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உடைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பார்வையிட்டு சோதனை செய்தனர். இதற்கிடையே கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களும் அங்கு வந்தனர். அவர்கள் கடையில் திருடப்பட்ட மது பாட்டில்களை கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பிற்கு பிறகே எவ்வளவு மது பாட்டில்கள் கொள்ளை போனது என்பது தெரியவரும்.

இதற்கிடையே டாஸ்மாக் கடையின் பின்புறம் மதுபாரும் உள்ளது. அங்கும் கொள்ளையர் கைவரிசை காட்டியுள்ளனர். பாரில் இருந்த உணவு பொருள்கள், சிகரெட் பண்டல்கள் ஆகியவற்றையும் அவர்கள் திருடி சென்றுள்ளனர். கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இப்பகுதியில் இரவிலும் வாகன போக்குவரத்தும், ஆள்நடமாட்டமும் இருக்கும். அப்படியிருந்தும் இங்கு கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் கொள்ளையரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News