செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சட்டவிரோத குடிநீர் ஆலைகள் - நடவடிக்கை கோரிய வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு

Published On 2020-02-27 13:15 GMT   |   Update On 2020-02-27 13:15 GMT
அனுமதியின்றி சட்டவிரோதம் ஆக நிலத்தடி நீர் எடுக்கும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மார்ச் மாதம் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அனுமதி பெறாமல் பலர் நிலத்தடி நீரை எடுக்கின்றனர். அவ்வாறு அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் சிவமுத்து என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு, ‘சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீரின் அளவு குறைகிறது. எனவே, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் இழுத்து மூடவேண்டும். இந்த ஆலைகள் உரிய அனுமதியை எதிர்காலத்தில் பெற்றாலும், ஐகோர்ட்டு அனுமதியில்லாமல், இந்த ஆலைகள் இயங்க அரசு அனுமதிக்கக் கூடாது.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும். தமிழகம் முழுவதும் எத்தனை குடிநீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன? எத்தனை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசிடம் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மார்ச் 3-ம் தேதி  ஒத்திவைக்கப்பட்டது.

அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று மாலை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News