செய்திகள்
கோப்பு படம்

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல்?

Published On 2020-02-27 05:13 GMT   |   Update On 2020-02-27 05:13 GMT
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் மாதம் நடந்தது.

இதில், 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 மாவட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத்தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் நடந்தது.

இதில் 102 பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.

இதில் தலா ஒருவர் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கும், 11 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும், 18 ஊராட்சி ஒன்றிய தலைவர், 71 ஊராட்சி துணைத்தலைவர்கள் மறை முகத்தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.

இதற்கான மறைமுகத்தேர்தல் வருகிற மார்ச் 4-ந்தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரிக்கப்பட்ட 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே வருகிற ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் இந்த மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று முக்கிய கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News