செய்திகள்
கைது

புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

Published On 2020-02-24 11:45 GMT   |   Update On 2020-02-24 11:45 GMT
புதுவையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீஸ்காரர்கள் கீர்த்திமோகன், டேவிட் ஆகியோர் நேற்று திருவள்ளுவர்சாலை சந்திப்பில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நெல்லித்தோப்பு பெரியார்நகரில் இருந்து திருடி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த போது மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் புகார் கொடுக்க வந்திருந்தார். அப்போது திருடப்பட்ட தன்னுடைய மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதை கண்டதும் ஆரோக்கியராஜ் மகிழ்ச்சி அடைந்தார்.

அதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலையை சேர்ந்த பழனி (வயது29) என்பதும் இவர் ஏற்கனவே உருளையன்பேட்டை பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்களையும், பெரியகடை பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களையும் திருடி இருப்பது தெரியவந்தது.

திருடிய மோட்டார் சைக்கிள்களை திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அங்கு மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்து வரும் நூர்முகமதுவிடம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து பழனியையும், திருட்டு மோட்டார் சைக்கிள்களை வாங்கிய நூர்முகமதுவையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News