செய்திகள்
கேஎஸ் அழகிரி

டிரம்ப் வருக்கைக்காக ரூ.80 கோடி செலவிடுவது வேடிக்கையானது - கேஎஸ் அழகிரி

Published On 2020-02-19 07:59 GMT   |   Update On 2020-02-19 07:59 GMT
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்காக அகமதாபாத்தில் ரூ.80 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருப்பது வேடிக்கையானது என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற 24, 25 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அவருக்கு கோலாகலமான வரவேற்பு கொடுப்பதற்கும், அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கும் இந்திய அரசு தீவிரமான முனைப்பை காட்டி வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திற்கு பிப்ரவரி 24-ந் தேதி வருகை புரிய இருக்கிற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அகமதாபாத் நகரை அழகுபடுத்துவதற்காக ரூ.80 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு வரவேற்பு கொடுக்க அகமதாபாத்தில் புதிதாக அரங்கம் கட்டப்பட்டு அங்கே தான் ‘நமஸ்தே டிரம்ப்” என்கிற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறுகிற இடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஏழை, எளிய மக்கள் வாழ்கிற குடிசைப்பகுதி இருக்கிறது.

அப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அங்கு வாழ்ந்து வருகிற குடிசைவாசிகளுக்கு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் 7 நாட்களில் உங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு அந்தப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையென்றால் பலவந்தமாக நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என்று அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

வெளியேற்றப்பட்டவர்களுக்கு மறுகுடியிருப்பு உத்தரவாதம் கொடுக்கப்படவில்லை. இதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து அரசின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், குஜராத் பா.ஜ.க. அரசு இதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.



அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் எந்த குடிசைப்பகுதியும் படக்கூடாது என்பதற்காக 600 மீட்டர் தொலைவிற்கு தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தச் செயல் குடிசைப்பகுதிகளில் வசிக்கிற ஏழை, எளிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகி அஸ்வதி ஜூவ்லா அந்த தடுப்பு சுவருக்கு அருகாமையில் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

பா.ஜனதா ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிற கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகியை தமிழ்நாடு காங்கிரஸ் பாராட்டுகிறது, போற்றுகிறது.

இந்தியாவில் ஏழை, எளிய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல முடியாத திறனற்ற மோடி அரசு எதேச்சதிகாரமான நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகள் உலகம் அறிந்த ஒன்று. இதைத் தடுப்புச் சுவர் எழுப்பி, மூடி மறைப்பதன் மூலம் தம்மை தாமே ஏமாற்றிக் கொள்ள முனைவது மிகுந்த நகைப்பிற்குரியது. இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக குஜராத் அரசு திரும்பப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News