செய்திகள்
நாய்கள் தொல்லை

சாத்தான்குளம் நகரில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள்- வியாபாரிகள் அவதி

Published On 2020-02-18 16:01 GMT   |   Update On 2020-02-18 16:01 GMT
சாத்தான்குளம் நகரில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக ஆக்கிரமித்துக் கொண்டு தொல்லை கொடுப்பதால் பொதுமக்கள், கடை வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் நகரில் தெரு வீதிகளிலும், பஜாரில் உள்ள வியாபார கடைகள் முன்பும் நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆக்கிரமித்துக் கொண்டு தொல்லை கொடுப்பதால் பொதுமக்கள், கடை வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதிகாலையில் தெருக்களிலும், மெயின் பஜாரில் பூட்டிய வியாபார கடைகளிலும் நாய்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

சாலைகளில் அங்குமிங்குமாக நாய்கள் கூட்டமாக செல்வதால் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலையில் தடுக்கி விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், இரு சக்கர வாகனங்கிளில் செல்பவர்கள் கொஞ்சம் கவனக்குறைவாக சென்றால் கீழே விழுந்து காயம் ஏற்படுவதுடன், நாய்க் கடிக்கும் ஆளாகும் அவலநிலை உள்ளது.

கடைகள் முன்பு நாய்கள் கூட்டமாக படுத்துக் கொள்வதால் கடை திறக்க வரும் வியாபாரிகள் நாய்களை அப்புறப்படுத்திட படாதபாடு படுகின்றனர். எங்கே நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் நாய்கள் வெளியேறும்வரை கடை முன்பு காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. பாதசாரிகள் செல்லும் போது நாய்கள் கடித்து பதம் பார்த்து விடக்கூடாது என்று பயந்து பயந்து செல்கின்றனர்.

இப்படி நகரில் தினசரி நாய்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டு போவதால் ரோடுகளில் நடக்க முடியவில்லை. வியாபாரிகள், பொதுமக்கள் கடைகளுக்குச் செல்ல முடியாத அவல நிலை தொடர்வதால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்தினர் நாய்களின் தொல்லையை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News