செய்திகள்
கோப்பு படம்

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

Published On 2020-02-17 11:07 GMT   |   Update On 2020-02-17 11:07 GMT
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என கோவை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் ராஜாமணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டு பல இன்னல்களுக்கு மத்தியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

ஆள் பற்றாக்குறை, உரம், பூச்சி மருந்துகள் விலை ஏற்றம், தட்ட வெப்ப நிலை மாற்றம், நீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் விவசாயம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கடந்த காலங்களில் இலவச மின்சாரம் தந்து வந்தனர். ஆனால் தற்போது விவசாயிகள் பணம் செலுத்தி மின் இணைப்பு பெறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதிலும் அனைத்து விவசாயிகளும் பணம் செலுத்தி மின் இணைப்பு பெற முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள். இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே இலவச மின்சார இணைப்பிற்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரிலேயே இலவச மின்சார இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் கோட்டூர் கடை வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. தற்போது இந்த டாஸ்மாக் கடை சங்கம்பாளையம் மணியகாரர் நகர் பகுதியில் உள்ள தனியார் தோப்பில் தொடங்கப்பட உள்ளது. இந்த தோப்பின் அருகே கோவில், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல், கடைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கடை இங்கு கொண்டு வரப்பட்டால் பெண்கள், குழந்தைகள் மிகவும் பாதிப்படைவார்கள். எனவே மாவட்ட கலெக்டர் இக்கடையை இங்கு கொண்டுவர அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

சூலூர் கந்துவட்டி சட்ட விழிப்புணர்வு பிரச்சார குழு தலைவர் செல்வராஜ் அளித்துள்ள மனுவில், சூலூர் பகுதியில் வசித்து வரும் பல மக்கள் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே போலீசார் கந்து வட்டி கொடுமையை கட்டுப்படுத்த வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News