செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

தடியடியை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் 2-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்

Published On 2020-02-15 07:59 GMT   |   Update On 2020-02-15 11:29 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இன்று 2-வது நாளாக முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து லேசான தடியடி நடத்தப்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.



கல்வீச்சில் போலீஸ் இணை கமி‌ஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஆயுதப்படை பெண் போலீசார் கலா, உதயகுமாரி ஆகியோர் காயம் அடைந்தனர். இணை கமி‌ஷனர் தவிர மற்ற 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முதியவர் ஒருவரின் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் முதியவர் இறந்துவிட்டதாகவும் தகவல் பரவியது. இதனால் போராட்டம் வலுவடைந்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர்.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 120 பேரை விடுவிக்கக்கோரி வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு திடீரென இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து போராட்டங்கள் தொடங்கியது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய 1000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போராட்டக்காரர்களுடன் சென்னை மாநகர கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். காவல்துறை தரப்பில் முதியவர் யாரும் இறக்கவில்லை என்றும் அது தவறான தகவல் என்றும் கூறியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு சென்னை மாநகர கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர்.

இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிராட்வே, திருவல்லிக்கேணி, பாரிமுனை, கிண்டி, ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் முஸ்லிம்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலையின் ஓரமாக அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

முஸ்லிம்கள் மீது நடத்திய தடியடியை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. இஸ்லாம் பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சாரை சாரையாக வந்த முஸ்லிம்களில் சிலர் கையில் தேசியக் கொடியை வைத்திருந்தனர்.

500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை போலீஸ் கமி‌ஷனர் தினகரன் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், எஸ்.டி.பி.ஐ. மாநில நிர்வாகிகள் அமீர் அம்சா, நெல்லை முபாரக் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

செங்குன்றம் சாமியார் மடத்தில், சென்னை - கொல்கத்தா செல்லும் சாலையில் நள்ளிரவு வரை சாலை மறியல் நடந்தது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

பின்னர் செங்குன்றம் பஜாரில் உள்ள மசூதி அருகில் ஜி.என்.டி. சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் போலீசை கண்டித்து மீண்டும் நள்ளிரவு 12 மணி அளவில் சாலை மறியலில் சிலர் ஈடுபட்டனர். அடுத்தடுத்து மறியல் போராட்டம் நடந்ததால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனரக வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. 1.30 மணி வரை மறியல் நீடித்தது. போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.

ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News