செய்திகள்
மெட்ரோ ரெயில்

2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

Published On 2020-02-14 06:39 GMT   |   Update On 2020-02-14 07:01 GMT
தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மெட்ரோ ரெயில் 2-வது திட்டம் குறித்து பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தின் கீழ் 118.90 கி.மீட்டர் நீளமுள்ள 3 மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை விரைவில் முடிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான திட்ட வடிவமைப்புகள் தயாராக உள்ள நிலையில் இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்ட திட்டத்திற்கு 50 சதவீத பங்கு மூலதனத்தினை மத்திய அரசு வழங்கியது போன்று இந்த 2-ம் கட்ட திட்டத்திற்கு 50 சதவீத பங்கு மூலதனம் வழங்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு பங்கு மூலதன உதவி சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டு கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News