செய்திகள்
ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற 108 ஜோடி திருமணத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார்.

திருமண நிதி உதவி திட்டத்துக்கு, அரசு 838 கிலோ தங்கம்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2020-02-12 08:19 GMT   |   Update On 2020-02-12 08:45 GMT
ஏழைப் பெண்களின் கனவை நனவாக்க திருமண நிதி உதவி திட்டத்துக்கு அரசு 838 கிலோ தங்கம், ரூ.415 கோடி வழங்கியுள்ளது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை:

பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடந்தது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

திருமணம் செய்வது என்பது எளிதான செயல் அல்ல என்பதையும், ஒரு திருமணத்தை நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பதையும், நமது முன்னோர்கள், “வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்னும் பழமொழி மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

ஒரு திருமணம் நடத்துவதே என்பது எவ்வளவு சிரமமானது என்று எண்ணும்போது, அதற்கும் மேலாக இங்கே 108 திருமணங்களை, அதுவும் வசதியற்ற 108 ஏழை, எளிய ஜோடிகளின் வாழ்வில் வசந்தம் மலரும்படி மிகச் சிறப்புடன் திருமண விழாவை நடத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு அரிமா இயக்கத்தை நான் மனம் உவந்து பாராட்டுகிறேன்.

ஆனால் இதற்கெல்லாம் முன்னோட்டமாக, அம்மா அவர்கள், மணமக்களின் இரு வீட்டாருக்கும் எந்த ஒரு செலவும் இல்லாமல், தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்ததையும், அந்தக் குடும்பங்களும், அக்குடும்பங்களின் சந்ததியினரும் அம்மாவை இன்றளவும் நெஞ்சார வாழ்த்திக் கொண்டிருப்பதையும், மிகப் பெருமையுடன் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பெற்ற தாயினும் மேலான பாசத்துடனும், பரிவுடனும், அவர்களுக்கு திருமாங்கல்யத்திற்கு நான்கு கிராம் தங்கமும், 25000 ரூபாய் நிதி உதவியும் வழங்கியவர் அம்மா.

பட்டம் படித்த பெண்களாக இருந்தால், அவர்களுக்கு தலா 50000 ரூபாய் நிதி உதவி அளித்து மணமக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர் அம்மா.

முதலில் 4 கிராம் தங்கம் என்று இருந்ததை பின்பு, 8 கிராம் என உயர்த்தி வழங்கி ஆணையிட்டவர் அம்மா.

அம்மா அவர்களது அடிச்சுவட்டில் பயணித்து வரும், அம்மாவின் அரசு, இன்று வரை இத்திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மொத்தம் 11 லட்சத்து 45 ஆயிரத்து 910 பயனாளிகளுக்கு 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 5260.72 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 3955 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

2019-20 -ம் நிதியாண்டில் மட்டும் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 795 பேருக்கு 838.36 கிலோ தங்கமும், ரூபாய் 415.21 கோடி நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்று நடைபெறும் திருமணத்தின் மூலம் இல்வாழ்க்கையில் இணைந்திருக்கும் தம்பதியினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இல்லறவாழ்வின் முதற்படியில் காலடி எடுத்து வைத்து, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை நீங்கள் இன்று துவக்க இருக்கிறீர்கள்.

இன்றையதினம் 108 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தினை நடத்தி வைத்திருக்கும் பன்னாட்டு அரிமா இயக்கம், மாவட்டம் 324ஏ5, இதுவரை 1000க்கும் மேற்பட்ட ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணங்களை நடத்தி, அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இனிய நேரத்தில் நான் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய கல்லூரி காலங்களில் நானும் அரிமா இயக்கத்தில் செயலளராக பணிபுரிந்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

Tags:    

Similar News