செய்திகள்
போராட்டம்

டெங்கு கொசு உற்பத்தி- ரப்பர் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2020-02-08 07:11 GMT   |   Update On 2020-02-08 07:11 GMT
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணியாக அமைந்து உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் காரமேடு என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக ரப்பர் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் மழை மற்றும் வெயிலில் பழைய டயர்களை வருடக்கணக்கில் சேமித்து வைத்து அதன் மூலம் ரப்பர் மேட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இங்கு டெங்கு கொசு பெருமளவில் உற்பத்தி ஆவதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முரளி கிருஷ்ணன், முரளிதரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின் அடிப்படையில் தொழிற்சாலைக்கு அபராதம் விதிக்க ஊராட்சி செயலாளர் நவீன் முற்பட்டபோது, வட்டார வளர்ச்சி அலுவலகத்தினர் அவருக்கு ஏற்கனவே பணியிடை மாற்றம் செய்த உத்தரவை அவரிடம் தெரிவித்தனர். இதனால் தனியார் தொழிற்சாலை குறித்த ஆய்வு பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தங்களது ஊராட்சியில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணியாக அமைந்து உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறையினர் முன்வரவேண்டும் என்றும் ஊராட்சி செயலாளர் நவீனின் பணியிடை மாற்றத்தை ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 400 பேர் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அதிகாரி குலசேகரன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது சம்மந்தப்பட்ட தொழிற்சாலையில் மீண்டும் ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்தாகவும், ஊராட்சி செயலாளர் மாற்றம் ஏற்கனவே நிலுவையில் இருந்த நிலையில் தற்போது அந்த மாற்றத்திற்கான உத்தரவு கூட ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரி குலசேகரன் தெரிவித்தார். இதனையடுத்து தங்களது 2 மணி நேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News