செய்திகள்
டிஎன்பிஎஸ்சி

ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலக பணியாளர் திடீர் தலைமறைவு

Published On 2020-02-08 05:11 GMT   |   Update On 2020-02-08 05:11 GMT
ஆம்பூர் அரசு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் ஒருவர் எந்த தகவலும் தெரிவிக்காமல் கடந்த ஒரு வாரமாக பணிக்கு வராததால் அவர் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு மூலம் பணியில் சேர்ந்தவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆம்பூர்:

டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் முறைகேடாக பணி நியமனம் பெற்றதாக அரசு பணியாளர்கள் சிலர் அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சிலர் தலைமைறைவாக உள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட பதிவுத்துறையில் பணிபுரிந்து வந்த சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடியாத்தம் அருகே பசுமாத்தூரை சேர்ந்த ஒருவர் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் மூலம் பணி நியமனம் பெற்றவர் என கூறப்படுகிறது.

இவர் கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் பணிக்கு வரவில்லை. விடுப்பு எடுப்பதாக எந்த தகவலும் உயர் அதிகாரிக்கும் தெரிவிக்கவில்லை. மேலும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது.

அதனால் அரசு பணியில் சேருவதற்காக அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவர் பணிக்கு தொடர்ந்து வராததால் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் பத்திரப் பதிவு ஐ.ஜி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News