செய்திகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு: பதிவுத்துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்டு

Published On 2020-02-07 07:19 GMT   |   Update On 2020-02-07 07:19 GMT
குரூப்-2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு பதிவுத்துறையில் ஊழியர்களாக பணியாற்றிய 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வு ஆகியவற்றில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வில் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 பேர் அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பான விசாரணையில்தான் இது தெரிய வந்தது.

இப்படி மோசடியாக தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்தனர்.

தலைமை செயலகம், சார் பதிவாளர் அலுவலகம், ஆர்.டி.ஒ. அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் 42 பேரும் பணியில் இருப்பதாகவும், அவர்கள் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

குரூப்-2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பலர் பதிவுத்துறை அலுவலகங்களில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோன்று பணியில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாளையங்கோட்டை சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் ஜெயராமன், காரைக்குடி பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக இருந்த வேல்முருகன் (சித்தாண்டியின் தம்பி), தூத்துக்குடி பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய சுதா, சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஞானசம்பந்தம் ஆகியோர் பிடிபட்டனர்.



இதே போன்று செம்பியம் சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் வடிவு, அதே அலுவலகத்தில் பணியாற்றிய ஆனந்தன் ஆகியோரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் குரூப்-2ஏ முறைகேட்டில் ஈடுபட்டு பணியில் சேர்ந்த 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை போன்று மற்ற துறைகளில் பணியாற்றிய 10-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் விரைவில் மற்ற அரசு பணிகளில் முறைகேடாக பணியில் சேர்ந்து போலீசில் சிக்கிய அனைவரும் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளனர்.

குரூப்-2ஏ தேர்வில் சென்னையில் பணிபுரிந்து வந்த சிவகங்கையைச் சேர்ந்த போலீஸ்காரர் சித்தாண்டி இடைத்தரகராக செயல்பட்டு முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் மூலமாக மோசடியாக பலரை பணியில் சேர்த்து விட்டு இருப்பது தெரியவந்தது.

இதற்காக இருவரும் கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வசூலித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ்காரர் சித்தாண்டி, அவரது கூட்டாளியான பூபதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பூபதி சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இதையடுத்து இருவரையும் சஸ்பெண்டு செய்து கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த மோசடிக்கு மூளையாக இருந்த முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்த அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News