செய்திகள்
கோப்பு படம்

ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலையில் பிரபல ரவுடிக்கு தொடர்பு? பரபரப்பு தகவல்கள்

Published On 2020-02-03 17:23 GMT   |   Update On 2020-02-03 17:23 GMT
ஓசூரில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டதில் பிரபல ரவுடிக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இமாம்பாடா பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 49). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சிறுபான்மை அணி துணை அமைப்பாளராக இருந்தார்.

நேற்று இரவு 7 மணி அவில் ஓசூர் காமராஜ் காலனி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள நடைமேடையில் நடை பயிற்சி மேற்கொண்டார். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள பலகை ஒன்றில் அமர்ந்து இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர்.

சம்பவ இடத்திலேயே மன்சூர்அலி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். நொடிப்பொழுதில் நடந்த இந்த கொலை சம்பவத்தை கண்டு நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சங்கு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

கொலை செய்யப்பட்ட மன்சூர்அலி உடலை கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. இந்த கொலையால் ஓசூரில் பதட்டம் நிலவுகிறது.

அவர் கொலை செய்யப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் அவரது வீடு உள்ள இமாம்பாடா பகுதி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது கொலை செய்யப்பட்டுள்ள மன்சூர்அலி கடற்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் கொலை முயற்சியில் இருந்து தப்பியவர். ஓசூர் ராம்நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ஜான்பாட்ஷா என்பவருக்கு மன்சூர்அலி வலது கரமாக திகழ்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஓசூர் ரெயில் நிலையத்தில் அவர்கள் 2 பேரும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது ரெயில் நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அவர்கள் 2 பேரை காரில் கடத்தி சென்றது. ஜான்பாட்ஷா குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த கும்பல் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ஜான் பாட்ஷா இறந்தார். பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகு மன்சூர்அலி உயிர் தப்பினார்.

2014ம் ஆண்டு கொலை முயற்சியில் தப்பியவர் நேற்று 5 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. 2014-ம் ஆண்டு கடத்திய கும்பலே இவரை கொன்றார்களா? அல்லது மன்சூர்அலி பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில்ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கொலையாளிகள் 5 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளனர். இதனால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களின் பதிவெண்ணை வைத்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொலை நடந்த அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் சி.சி.டி.வி. காமிராக்கள் இல்லை. ஆனால் மற்ற இடங்களில் காமிராக்களை போலீசார் வைத்துள்ளனர். பல வீடுகளிலும் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன. இதனால் அந்த கண்காணிப்பு காமிராக்களில் கொலையாளிகள் வந்த மோடடார் சைக்கிள்களின் பதிவெண்கள் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. சங்கு மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணதாஸ் (ஓசூர் டவுன்), பாலகிருஷ்ணன் (சிப்காட்), முத்துகிருஷ்ணன் (சூளகிரி), முருகேசன் (பாகலூர்) மற்றும் போலீசார் இந்த தனிப்படையில் உள்ளனர். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2014-ம் ஆண்டு ரில் எஸ்டேட் அதிபர் ஜான்பாட் ஷாவை கடத்திச் சென்று கொன்ற ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது இதனால் அவர் ஆட்களை அனுப்பி மன்சூர்அலியை கொன்றாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News