செய்திகள்
கொரோனா வைரஸ்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு இல்லை - மருத்துவ பரிசோதனையில் தகவல்

Published On 2020-02-02 05:55 GMT   |   Update On 2020-02-02 05:55 GMT
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்று திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

சீனாவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அனைத்து நாடுகளின் சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளிடம் தீவிர மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

சீனாவில் இருந்து தாயகம் திரும்பும் பயணிகள் அனைவரும் உச்சகட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நோய்க்கான அறிகுறி தென்படும் நபர்களுக்கு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் நேற்று சீனாவில் இருந்து 324 இந்தியர்கள் உகான் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகே அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வந்த 3,223 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த தவமணி என்பவரது மகன் அருண்(27) என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா கூறியபோது, “அனைத்து வைரஸ் நோய் தொற்றும் ஒரேமாதிரியானதுதான். எனவே கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை” என்று  தெரிவித்தார்.
Tags:    

Similar News