செய்திகள்
ரஜினிகாந்த்

தமிழ் புத்தாண்டு தினத்தில் ரஜினியின் புதிய கட்சி தொடக்கமா?

Published On 2020-01-30 06:30 GMT   |   Update On 2020-01-30 06:30 GMT
2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் இந்த ஆண்டிலேயே கட்சி அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை :

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கூறினார். அதன் பிறகு ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.

ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கவும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்களில் கூட ரஜினி மக்கள் மன்றம் தற்போது இயங்கி வருகிறது.

ரஜினியும் தனது பேட்டிகளில் வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க இருப்பதை உறுதிபடுத்தி வருகிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சி போட்டியிடும் என்றும் இந்த ஆண்டிலேயே கட்சி அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ரஜினி கட்சி தொடங்குவதற்கான பணிகள் வேகம் எடுத்து வருகிறது. வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு அன்று கட்சி பெயரை அறிவித்து தேர்தல் வேலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.  உறுப்பினர் சேர்க்கையில் 75 சதவீதமும் பூத் கமிட்டிகள் அமைப்பதில் 82 சதவீத பணிகளையும் முடித்துவிட்டு காத்திருக்கிறோம். சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதில் அவர் 234 தொகுதிகளிலும் களம் இறங்கி வெற்றி பெறுவார். அடுத்த ஆண்டு நிச்சயம் ரஜினியை முதல்-அமைச்சராக பார்ப்போம்.

கட்சிக்கான கொடியையும் பெயரையும் அவர் தேர்ந்தெடுத்துவிட்டார். முறைப்படி அறிவித்துவிட்டு பதிவு செய்வதுதான் பாக்கி. இதற்காக அவர் தொடர்ந்து முக்கிய ஆளுமைகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக தமிழருவி மணியன், ஏசி.சண்முகம் இருவரையும் அடிக்கடி சந்தித்து பேசிவருகிறார்.
அவர்களது ஆலோசனையின் பேரிலேயே அமைதி காத்து வருகிறார். கட்சிக்கான புதிய அலுவலகம் அமைக்கும் பணி ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்க திட்டமிட்டதில் இதுவரை சுமார் 55 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு விட்டன. தற்போது தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு 30 நிர்வாகிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு ஆள்பலம் தி.மு.க, அ.தி.மு.கவை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது

இந்த சாதனையை ரஜினி காந்த் மவுனமாக சாதித்து காட்டிவிட்டார். ஒரு கட்சியை தொடங்க வேண்டியதற்கான கட்டமைப்பை மிகக் கவன மாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு அடுத்த கட்டம் கட்சியை தொடங்குவது மட்டும்தான். அது ஏப்ரலில் நடந்துவிடும். ஒரு ஆண்டுகாலம் முழுமையாக பிரசாரத்துக்கு ஒதுக்கி ஆட்சியை பிடிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

பொங்கலுக்கு பின்னர் நடந்த சனிப்பெயர்ச்சி ரஜினிக்கு சாதகமான பலன்களை வழங்க கூடும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுவதால் இனி கட்சி பணிகள் வேகம் எடுக்க இருக்கிறது. ரஜினி மேலும் சில ஆளுமைகளுடனும் மூத்த தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். நடிகராக இருந்த போது பெரும்பாலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்த ரஜினி. இப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சந்திக்கிறார். வெளியூருக்கு செல்லும்போது விமான நிலையத்தில் பேட்டி அளிக்கிறார்.

ரஜினி அரசியலில் இறங்கும் போது அவருடன் கமல்ஹாசனை சேர்த்து பலமான கூட்டணியாக களம் இறங்க சிலர் முயற்சி எடுத்து வருகிறார்கள். கமலுக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இருக்கிறது. ரஜினிக்கு கிராமப்புறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இருவரும் இணைவது என்பது இருவருக்குமே நன்மை தரும் ஒன்றாக இருக்கும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பார்கள். ஒருவேளை ரஜினி கமலுடன் கூட்டணி வைத்தால் அது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.

சினிமாவில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே பெரும் வெற்றியை பெற்றுள்ளன. அதேபோல் அரசியலிலும் இருவரையும் இணைத்து பெரிய வெற்றியை அடைய வைக்க தீவிர முயற்சிகள் நடக்கின்றன. இருவரும் இணைவதற்கான தொடக்க கட்ட பேச்சு வார்த்தைகளும் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது அரசியல் கூட்டணியாக மாறினால் அது தமிழக அரசியல் வரலாற்றிலேயே பெரும் திருப்புமுனையாக அமையும்.

ரஜினி, கமல் இருவருக்கும் நெருக்கமான அரசியல் விமர்சகர்கள், தொழிலதிபர்கள் சிலர் இந்த இணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏப்ரலுக்கு பிறகு ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழக அரசியலில் ரஜினியால் திருப்புமுனைகள் ஏற்பட இருக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News